இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குழந்தைகள் தத்துக்கொடுக்கப்பட்ட விவகாரம்: சுவிட்சர்லாந்து இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சுவிட்சர்லாந்து பாரபட்சமின்றி விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கை உட்பட 32 நாடுகளில் வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான 530 க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கான ஐ.நா.சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு மேற்கொண்ட மீளாய்வில் இந்த சட்ட விரோதமாக இலங்கையிலிருந்து குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது.
சட்ட விரோத தத்தெடுத்தல்களை தவிர்க்க தவறியதை சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளதை அங்கீகரித்துள்ள அந்த குழு, சுவிட்சர்லாந்தைப் போன்ற ஒரு பணக்கார நாடு, தற்போது வயது வந்தவர்களாகிவிட்ட அந்த குழந்தைகளுக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
குறிப்பாக, அந்த காலகட்டத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை கண்டறிய வகையில் வழக்குகளை மீண்டும் எடுத்து நடத்தவேண்டும் என்றும் அந்த குழு சுவிஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அந்த அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி
செய்யுமாறு அக்குழு சுவிட்சர்லாந்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
1970களுக்கும் 1990களுக்கும் இடையில், சுமார் 900 இலங்கைக் குழந்தைகள், சுவிஸ்
பெற்றோருக்கு சட்ட விரோதமாக விற்கப்பட்டதை கடந்த டிசம்பரில் முதன்முறையாக
சுவிட்சர்லாந்து அரசு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.