சவுதி அரச குடும்பம் தொடர்பில் கைதான சுவிஸ் நபர்: விதிக்கப்பட்ட தண்டனை
சவுதி அரேபியாவின் அரச குடும்பத்திற்கு சட்டவிரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ததாக கூறி சுவிஸ் நாட்டவர் தண்டனை பெற்றுள்ளார்.
கடந்த 2014 முதல் 2018 வரையான காலகட்டத்தில் 56 வயதான சுவிஸ் நாட்டவர் சவுதி அரேபிய அரச குடும்பத்திற்கு சட்டவிரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
சுமார் 670,000 பிராங்குகள் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை செய்துள்ளது சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
குறித்த நபர் ஜெனீவா பகுதியில் ஒரு துப்பாக்கி விற்பனை மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையிலேயே சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கிகளை தனிப்பட்ட முறையில் தமது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
2018ல் மது போதையில் வாகனம் ஓட்டிச் சென்ற இவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அப்போது முன்னெடுக்கப்பட்ட சோதனையில், துப்பாக்கி ஒன்று தோட்டாக்கள் நிரப்பப்பட்ட நிலையில் இவரது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மட்டுமின்றி, விரிவான சோதனையில் உரிமம் ஏதுமற்ற 77 துப்பாக்கிகள் இவரிடம் இருந்து அப்போது கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், ஆயுதங்களை உரிமம் பெறாமல் வர்த்தகம் செய்ததற்காக இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஆயுத சட்டத்தினை பலமுறை மீறியுள்ளதாக கூறி 3000 பிராங்குகள் அபராதமும் விதித்துள்ளனர்.