பாகிஸ்தானை சுழன்றடித்த 24 வயது இலங்கை வீராங்கனை! டி20யில் 64 பந்தில் 101 ஓட்டங்கள் விளாசல்
தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில், இலங்கை அணி 6 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
முனீபா அலி, ஷாவால் ஸுல்ஃபிஹர் விளாசல்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் முதல் விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தனர்.
முனீபா அலி (Muneeba Ali) 24 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ரன்அவுட் ஆனார். பின்னர் அரைசதம் விளாசிய ஷாவால் ஸுல்ஃபிஹர் (Shawaal Zulfiqar) 41 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் இமேஷா துலானி, சமரி அதப்பத்து கூட்டணி அதிரயில் மிரட்டியது.
இமேஷா துலானி சதம்
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 22 பந்துகளில் 39 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விஷ்மி (3), ஹர்ஷிதா (7) ஆகியோர் சொதப்ப, 24 வயதான இமேஷா துலானி (Imesha Dulani) பவுண்டரிகளை விரட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 63 பந்துகளில் சதம் விளாசிய இமேஷா, 19வது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்ட வைத்தார்.
இலங்கை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இமேஷா துலானி ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகி விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |