புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம்: பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமிடையே கருத்து மோதல்
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி விமர்சித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
ருவாண்டா திட்டம்
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த பிரித்தானியா தீவிரமாக திட்டமிட்டுவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பான மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், விரைவில், அந்த மசோதா சட்டமாக்கப்பட உள்ளது.
Credit: Simon Dawson / No 10 Downing Street
பிரான்ஸ் ஜனாதிபதி விமர்சனம்
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம், ஐரோப்பிய கொள்கைகளுக்கு செய்யப்படும் துரோகம் என விமர்சித்துள்ளார்.
மேக்ரானின் கருத்து பிரித்தானியாவை எரிச்சலடையச் செய்துள்ள நிலையில், பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தாங்கள் மேக்ரானின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றும், பிரித்தானியாவின் அணுகுமுறையே சரியானது என்றும் கூறியுள்ளார்.
Credit: EPA
மேக்ரானின் கருத்தால் கோபமடைந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர் மீது கோப விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். Marco Longhi என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், திரு மேக்ரான் அவர்கள், மற்றவர்களுக்கு தான் சொல்லும் அறிவுரைகளை பிரான்ஸ் தரப்பு நிறைவேற்றுகிறதா என்பதை கொஞ்சம் கவனிக்கவேண்டும்.
பிரான்ஸ் பொலிசார் புலம்பெயர்வோரை உயிருக்கு ஆபத்தான வகையில், ஆங்கிலக்கால்வாயைக் கடக்க அனுமதிப்பது ஐரோப்பிய கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் செயல் இல்லையா என அவர் தன்னைத்தான் கேட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |