கனடாவில் புலம்பெயர்ந்தோரின் ஊதியம் தொடர்ந்து அதிகரிப்பு: ஆய்வு முடிவுகள்
புலம்பெயர்ந்தோரின் ஊதியம் சமீப காலமாக உயர்ந்து வருவதாக கனேடிய ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டில் கனடாவில் நிரந்தர வாழிடம் பெற்ற புலம்பெயர்ந்தோர் சராசரியாக 31,900 டொலர்கள் ஊதியம் பெற்றதாக (median wage) அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டிலிருந்து கணக்குப் பார்த்தால், கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்த அனைத்துப் பிரிவு புலம்பெயர்ந்தோர் பெற்ற ஊதியத்திலேயே இதுதான் மிக உயர்ந்த ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவரங்கள், கனடாவின் புள்ளிவிவரங்கள் அமைப்பு, சமீபத்தில் புலம்பெயர்ந்தோரின் ஊதியம் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளன.
அதே நேரத்தில், பொருளாதார வகுப்பு புலம்பெயர்தல் திட்டத்துக்கு முதன்முதலில் விண்ணப்பித்தவர்களைப் பார்த்தால், அவர்கள் 2019ஆம் ஆண்டில் பெற்ற ஊதியம், அதே காலகட்டத்தில் கனடாவில் பிறந்தவர்கள் பெற்ற ஊதியத்தைவிட அதிகமாக உள்ளது. இந்த புலம்பெயர்ந்தோர் 2018இல் கனடாவுக்கு வந்தவர்கள் ஆவர். அடுத்த ஆண்டே அவர்கள் 43,600 டொலர்கள் ஊதியம் பெற்றார்கள். அந்த தொகை அதே ஆண்டில் கனேடியர்கள் பெற்ற சராசரி ஊதியத்தைவிட 12 சதவிகிதம் அதிகமாகும்.
இதற்கான காரணம், பொருளாதார வகுப்பு புலம்பெயர்ந்தோர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
பொருளாதார வகுப்பு புலம்பெயர்தல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் முதன்மை விண்ணப்பதாரர்கள், அவர்களுடைய கனேடிய தொழிலாளர் சந்தையுடன் ஒருங்கிணையும் திறன் மற்றும் பொருளாதாரத்துக்கு அவர்களுடைய பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் post-secondary education கல்வி கற்றவர்களாகவும், கனேடிய அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றையாவது அறிந்துவைத்திருந்தவர்களாகவும் இருந்தார்கள்.
கனேடிய பணி அனுபவம் வருவாய் உயர உதவுகிறது.
புலம்பெயர்தலுக்கு முந்தைய கனேடிய பணி அனுபவம் பெற்றிருத்தல், புலம்பெயர்ந்தோரின் ஊதியத்தின் மேல் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. கனேடிய அனுபவமானது, கனடாவில் பணி மற்றும் கல்வி அனுபவம், பணி அனுபவம் மட்டும், மற்றும் கல்வி அனுபவம் மட்டும் என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
கனேடிய பணி மற்றும் கல்வி அனுபவம் இரண்டும் பெற்ற புலம்பெயர்ந்தோர், பணியில் இணைந்து ஓராண்டுக்குப் பின் அவர்களுக்கு மிக அதிக ஊதியம் கிடைத்தது. 2018இல் பணியில் இணைந்த அந்த புலம்பெயர்ந்தோர், 2019இல் 44,600 டொலர்கள் ஊதியம் பெற்றார்கள். அதே காலகட்டத்தில் கனடாவில் பிறந்தவர்கள் பெற்ற ஊதியம் 38,800 மட்டுமே!
பணி அனுபவம் மட்டும் பெற்றவர்களும் கனடாவில் பிறந்தவர்கள் பெற்ற ஊதியத்தைவிட அதிகம் ஊதியம்தான் பெற்றார்கள். அவர்கள் பெற்ற ஊதியம் 39,300 டொலர்கள்.
ஆனால், கல்வி அனுபவம் மட்டும் பெற்றவர்களோ குறைவான ஊதியமே பெற்றார்கள். அவர்கள் பணியில் இணைந்து ஓராண்டுக்குப் பின் பெற்ற சராசரி ஊதியம் 15,100 டொலர்கள் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு!