கனடாவில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்
கனடாவின் ஒன்ராறியோவில் பெண் ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளான நிலையில், குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக, புலம்பெயர்ந்தோர் பலர் DNA சோதனைக்குட்படுத்தப்பட்டது மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஒன்ராறியோவில், தன் வீட்டிலிருந்த பெண் ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளானார். வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணைத் தலையில் தாக்கி, அவரது கண்களைக் கட்டி, அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பொலிஸ் விசாரணையின்போது, அந்தப் பெண், தன்னைத் தாக்கியவர் ஒரு கருப்பினத்தவர் என்றும், 5 அடி 10 அங்குலம் முதல் 6 அடி வரை இருப்பார் என்றும், அவர் முகத்தில் தாடியோ மீசையோ இல்லை என்றும், அவரது பேச்சு ஜமைக்கா நாட்டவரின் பேச்சு போல் இருந்ததாக்வும் தெரிவித்துள்ளார். அவர் நல்ல வாட்டசாட்டமாக இருந்ததாகவும், அவர் தனது 20 வயதுகளிலிருக்கலாம் என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார்.
அத்துடன், அந்த நபர் கட்டாயம் ஒரு புலம்பெயர்ந்தோராகத்தான் இருக்கமுடியும் என்றும், அவரை தன் வீட்டுக்கு அருகில் எப்போதோ தான் பார்த்தது போல தனக்குத் தோன்றுவதாகவும் தெரிவித்திருந்தார் அந்தப் பெண்.
உடனடியாக, பொலிசார் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் அனைவரையும் அழைத்து, அவர்களிடமிருந்து DNAவை சேகரித்துள்ளனர்.
அப்படி சுமார் 96 பேரிடமிருந்து DNAவை சேகரித்துள்ளனர் பொலிசார்.
இந்நிலையில், அப்படி DNA சோதனைக்குட்படுத்தப்பட்டவர்களில் 54 புலம்பெயர் பணியாளர்கள் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
பொலிசார், அந்தப் பெண் கொடுத்த குற்றவாளியைக் குறித்த விவரங்களை வெள்ளையினத்தவரிடம் கூறியுள்ளார்கள். ஆனால், இந்த புலம்பெயர்ந்தோரிடம் அது குறித்துக் கூறவில்லை. அத்துடன், அந்தப் பெண் கூறியது போன்ற தோற்றம் இல்லாதவர்களிடமும் DNAவை சேகரித்துள்ளனர் பொலிசார்.
ஆக, வெறும் நிறத்தின் அடிப்படையில் அனைவரையும் பாகுபாடு காட்டி DNAவை சேகரித்துள்ளனர் பொலிசார். இது மனித உரிமை மீறல் என வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார் புலம்பெயர்ந்தோர் சார்பில் வாதிடும் சட்டத்தரணியான Shane Martínez.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு 30,000 டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
வழக்கை விசாரிக்கும் தீர்ப்பாயத்தை கவனிக்கும் Marla Burstynஉடைய முடிவுக்காக காத்திருக்கிறார்கள் அந்த புலம்பெயர்ந்தோர்!