கனடாவை விட்டு அமைதியாக வெளியேறி வரும் புலம்பெயர்ந்தோர்: அதிகம் பேசப்படாத அதிரவைக்கும் ஒரு செய்தி
கனவுகளுடன் கனடாவுக்கு புலம்பெயரும் பலர், கனடாவிலிருந்து அமைதியாக வெளியேறிக்கொண்டிருப்பதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியர்களான மன்பிரீத் சிங் (Manpreet Singh) மற்றும் அவரது மனைவியான ஹர்மீத் சிங் (Harmeet Kaur) ஆகியோர், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த புதிதில், புதிதாக கனடாவுக்கு வந்தவர்கள் என்ற வகையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே, தங்களைப் போலவே புதிதாக வருபவர்களுக்கு உதவும் வகையில், ஒரு யூடியூப் சேனலைத் துவக்கி, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள் அவர்கள்.
அரை மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட அந்த சேனலில், எப்படி கனடாவுக்கு வருவது, புலம்பெயர்ந்தபின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது முதலான விடயங்கள் வீடியோக்களாக பகிர்ந்துகொள்ளப்படும் நிலையில், தங்கள் தோல்விகளையும், தாங்கள் கனடாவில் எதிர்கொள்ளும் சவால்களையும் குறித்து யாருமே பேசமாட்டேன்கிறார்கள் என்கிறார் சிங்.
கனடாவுக்கு வந்த புதிதில், கனேடிய பணி அனுபவம் இல்லாததால் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட சிங், பிறகு இந்தியாவில் தான் வால்மார்ட்டில் வேலை செய்த அனுபவத்தை வைத்து கனடா வால்மார்ட்டில் தனக்கு வேலை கிடைத்ததாகத் தெரிவிக்கிறார்.
உண்மைதான், கனடாவில் ஏராளம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்பது போன்ற செய்திகளை அடிக்கடி நாம் பார்க்கிறோம்.
ஆனால், அப்படி விளம்பரங்களை நம்பி கனடாவுக்கு வருவோர் எல்லோரும் சிறப்பாக கனடாவில் செட்டில் ஆகிவிடுவதில்லை என சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நிகராகுவா நாட்டைச் சேர்ந்த Franco Rayo (33) தன் மனைவி Natalie Rayo (29) மற்றும் தன் மகனுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்திருக்கிறார். கனடாவிலேயே முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த Francoவுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்திருக்கிறது.
அப்படியே வேலை கிடைத்தாலும், அவருக்கு அவர் படிப்பிற்கேற்ற வேலை கொடுக்கப்படாமல் சிறிய வேலைகளே கொடுக்கப்பட்டுள்ளன, அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட ஆண்டு வருமானம், 45,000 கனேடிய டொலர்கள்!
பணவீக்கம் அதிகரிக்க, விலைவாசி உயர்ந்துகொண்டே செல்ல, பெருந்தொற்று வேறு தொந்தரவாக வந்து சேர, கனடாவை விட்டு வெளியேறி மீண்டும் தாங்கள் விட்டு வந்த நிகராகுவா நாட்டுக்கே தங்கள் மகனுடன் திரும்பிய Rayo தம்பதியர், இப்போது தங்கள் நாட்டில் சொந்தத் தொழில் செய்கிறார்கள்.
அவர்கள் கூறும் விடயத்தைக் கேட்டால் ஒரு பக்கம் வேடிக்கையாகவும் மறுபக்கம் ஆச்சரியமாகவும் உள்ளது. ஆம், கனடாவில் தாங்கள் வாழ்ந்ததை விட நல்ல வாக்கைத்தரத்துடனும், பணக்கஷ்டம் இல்லாமலும் தாங்கள் வாழ்வதாகத் தெரிவிக்கிறார்கள் Rayo தம்பதியர்.
ஆக, கனடா இரு கரம் நீட்டி வரவேற்பது உண்மைதான். அதி சந்தேகமேயில்லை. ஆனால், வந்த புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் கனடாவில் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டும் புள்ளி விவரங்கள் கனடா அரசிடம் இல்லையாம். அதாவது, கனடாவுக்கு வந்தவர்களின் கணக்கு உள்ளது, கனடாவிலிருந்து வெளியேறியவர்களின் சரியான கணக்கு இல்லாததால், இப்போது கனடாவில் இருப்பவர்களில் சரியான கணக்கும் இல்லை.
சமீபத்தில் சில அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில், 50 சதவிகித சர்வதேச மாணவர்கள் ஏற்கனவே கனடாவை விட்டு வெளியேறியுள்ளதும், பட்டப்படிப்பு முடித்த 23 சதவிகித புதிய புலம்பெயர்ந்தோர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கனடாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களில் 35 வயதுக்கு கீழுள்ளவர்கள் 30 சதவிகிதம்.
ஆக, படிப்புக்கேற்ற வேலையில்லாமை, தங்களைப் போன்ற அதே வேலையில் இருக்கும் கனேடியர்களை விட குறைந்த வருவாய், வீடு கிடைப்பதிலுள்ள பிரச்சினைகள், விலைவாசி என பல பிரச்சினைகள் காரணமாக பெரும் கனவுகளுடன் கனடா சென்ற பலர் தங்கள் நாடுகளுக்கே திரும்பி வருவதாக தெரியவந்துள்ள விடயம், நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் உள்ளது!