சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் இனி இந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்: பிரித்தானியாவின் அதிரடி திட்டம்
சட்ட விரோதமாக படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை அல்பேனியா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் அதிரடி திட்டம் ஒன்றை அமுல்படுத்த பிரித்தானிய அமைச்சர்கள் தயாராகி வருகிறார்கள்.
வடக்கு பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுக்க உள்துறை அலுவலகம் எத்தனை முயற்சிகள் எடுத்தும், அதை முழுமையாக தடுக்க இயலவில்லை.
பிரான்ஸ் வழியாக வரும் புலம்பெயர்வோரைத் தடுக்க பிரான்ஸ் தரப்புக்கு பணம் கொடுத்தும், அவர்கள் முழுமையாக புலம்பெயர்வோரைத் தடுக்கவில்லை. கடந்த வியாழக்கிழமை, ஒரே நாளில் 1,185 பேர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்ததால் பிரித்தானிய தரப்பு கடும் வெறுப்பில் உள்ளது.
கடந்த வாரம் இது குறித்து பேசிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை 100 சதவிகிதம் தடுத்து நிறுத்தியே தீருவேன் என உறுதிபட தெரிவித்தார்.
இந்நிலையில்தான், இப்படி ஒரு அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சட்ட விரோதமாக படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்காக அல்பேனியா நாட்டில் புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பிரித்தானிய அமைச்சர்கள் ஆலோசனை செய்துவருகிறார்கள். அப்படிச் செய்தாலாவது புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழையத் தயங்குவார்கள் என்பது அவர்கள் எண்ணம்.
ஏற்கனவே ஒருமுறை இதுகுறித்த செய்தி வெளியானபோது, தொண்டு நிறுவனங்கள், இது ஒரு மனிதத்தன்மையற்ற நடவடிக்கை நடவடிக்கை என விமர்சித்திருந்தன.
அதே நேரத்தில், அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அதாவது சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரை அல்பேனியாவுக்கு அனுப்ப முடிவாகும் நிலையில், அதை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை என புலம்பெயர்தல் நிபுணர் ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.