நகைகளை விற்று வேலையை விட்டு கனடாவிலிருந்து நல்ல செய்தி வரும் என காத்திருக்கும் குடும்பங்கள்
கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளிடமிருந்து நல்ல செய்தி வராதா என காத்திருக்கும் நிலையில், காத்திருக்கும் காலம் நீண்டுகொண்டே செல்வதால், நகைகளை விற்றுவிட்டு, வேலையை விட்டு விட்டு காத்திருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன சில குடும்பங்கள்.
கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளிடமிருந்து செய்தி ஏதாவது வந்துள்ளதா என்பதை அறிவதற்காக, நாளொன்றிற்கு பல முறை மின்னஞ்சல்களை சோதிக்கும் பெங்களுருவைச் சேர்ந்த Aashray Kovi (28), கனடா செல்வதற்குரிய ஆவணங்கள் ஒன்றில் காலாவதியாகிவிட்ட, அல்லது காலாவதியாகும் நிலையிலுள்ள கனடா செல்வதற்காக காத்திருக்கும் 23,000 புலம்பெயர்வோரில் ஒருவர்.
கனடாவில் சென்று குடியமர திட்டமிட்டுள்ள Aashray, பயணக் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுவதற்கு முன் தனது confirmation of permanent residency (COPR) ஆவணம் காலாவதியாகிவிட்டதால் கனடாவுக்கு பயணிக்க முடியாத நிலையில் இருக்கிறார். அந்த ஆவணத்திற்காக மீண்டும் விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கிறார் Aashray.
ஆனால், இதுவரை கனடாவிலிருந்து எந்த தகவலும் இல்லை. உறுதியான தகவல் ஏதாவது கனடாவிலிருந்து வருமானால், 2022 வரை கூட காத்திருக்கத் தயார் என்கிறார் அவர். அவரைப் போலவே, புது டில்லியைச் சேர்ந்த Sameer Masihயும் அவரது குடும்பமும் காத்திருக்கின்றனர்.
ஏழு மாதங்களுக்கு முன்பே ஆரம்ப கட்ட அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், கனடாவுக்கு செல்லும் நாளுக்காக காத்திருக்கும் Sameer, நகைகள் முதலான பொருட்களை விற்று அதில் வரும் பணத்தில் தனது குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார்.
இவர்களைப் போலவே பலரும் கனடாவிலிருந்து எப்போது நல்ல செய்தி வரும் என காத்திருக்கிறார்கள்.