ஆண்டொன்றிற்கு சுமார் 25,000 புலம்பெயர்வோரை வரவேற்க இலக்கு நிர்ணயித்துள்ள கனேடிய மாகாணம்: ஒரு நல்ல செய்தி
சில நாடுகள் புலம்பெயர்வோரை தொல்லையாக கருதும் நிலையில், கனடாவோ பல்வேறு சந்தர்ப்பங்களில் புலம்பெயர்வோர் குறித்து நல்ல கருத்துக்களையே தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரால் தொழிலாளர் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடம் நிரப்பப்பட்டுள்ளது, நாட்டின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது என்பது போன்ற கருத்துக்களை கனடா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அவ்வகையில், கனேடிய மாகாணம் ஒன்றின் மக்கள்தொகை அதிகரிக்க புலம்பெயர்ந்தோர் காரணமாக அமைந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், கனடாவின் Nova Scotia மாகாணத்தின் மக்கள்தொகையையே உயர்த்த புலம்பெயர்ந்தோர் உதவியிருக்கிறார்கள் என்று கூறும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவின் Nova Scotia மாகாணத்தின் மக்கள்தொகை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. அதற்கு புலம்பெயர்ந்தோருக்குத்தான் பெரிய நன்றி கூறவேண்டும் என்கிறது அந்த செய்தி.
2021 ஜூலைக்குப் பிறகு பெருமளவில் புலம்பெயர்ந்தோர் Nova Scotiaவுக்கு வந்ததைத் தொடர்ந்து அதன் மக்கள்தொகை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
அதிக மக்கள் எங்களை அதிக வலிமையுடையவர்களாக்குகிறார்கள் என்கிறார் Nova Scotiaவின் பிரீமியரான Tim Houston. புதிய வரி அடிப்படை, புதிய தொழில்கள், பணிகள், பல்வேறு தரப்பினரான மக்கள் மற்றும் கலாசாரம், மேம்பட்டுள்ள உள் கட்டமைப்பு என, நாங்கள் அனைவரும் இந்த வளர்ச்சியால் பயனடைந்துள்ளோம் என்று கூறுகிறார் அவர்.
மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மக்கள்தொகை வளர்ச்சிக்கு புலம்பெயர்தல் பெருமளவில் பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2060 வாக்கில் மக்கள்தொகையை இரண்டு மில்லியனாக அதிகரிக்க விரும்புகிறது Nova Scotia மாகாணம். ஆகவே, ஆண்டொன்றிற்கு சுமார் 25,000 புதியவர்களை வரவேற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.