2022ஆம் ஆண்டில் புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அரசு எடுக்கவிருக்கும் முக்கிய நடவடிக்கைகள் சில...
தற்போதைய புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின்படி கனடா 2022இல் 411,000 புலம்பெயர்வோரையும், 2023இல் 421,000 புலம்பெயர்வோரையும் வரவேற்க உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
அது தவிர புலம்பெயர்தல் தொடர்பில் வேறு என்னென்ன நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்?
1. ஏற்கனவே குவிந்துள்ள விண்ணப்பங்கள்
கொரோனா காலகட்டம் காரணமாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் 1.8 மில்லியன் புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. அவை உட்பட விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraserஇடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
2. NOC திறன் மட்டம் TEER திட்டமாக மாற்றப்பட உள்ளது
2022 இலையுதிர் காலத்தில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும், கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பும், தொழில்களை வகைப்படுத்த (National Occupational Classification - NOC) வகைப்பாட்டுக்கு பதிலாக, புதிய, பயிற்சி, கல்வி, அனுபவம் மற்றும் பொறுப்புகள் (Training, Education, Experience, and Responsibilities - TEER) திட்டத்தை பயன்படுத்த உள்ளன.
இந்த மாற்றம், சிலரது புலம்பெயர்தல் மற்றும் பணித் தகுதி ஆகியவற்றை பாதிக்க உள்ளது என்பதால், அனைத்து புலம்பெயர்தல் விண்ணப்பதாரர்களும் இதில் கவனம் செலுத்துவது நல்லது.
3. குடியுரிமை விண்ணப்பங்கள்
குடியுரிமை விண்ணப்பம் செலுத்துவதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், அதாவது இலவசமாக்கப்படுவதுடன், குடும்ப உறுப்பினர்கள் முதலான குடியுரிமை விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஒன்லைனில் விண்ணப்பங்களை செலுத்துவதை நடைமுறைப்படுத்துவதை கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும் உறுதி பூண்டுள்ளது.
4. Trusted employer system
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்துக்கான (Temporary Foreign Worker Program - TFWP), நம்பிக்கைக்குரிய பணி வழங்குபவர் திட்டம் (Trusted Employer system) ஒன்றை உருவாக்குவது குறித்து பல ஆண்டுகளாகவே கனடா ஆலோசித்து வருகிறது. அந்த திட்டத்தை அமுல்படுத்துவதும் Fraserஇன் திட்டத்தில் உள்ளது.
5. பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவரும் திட்டம் (Parents and Grandparents Program - PGP- 2022)
இத்திட்டத்தின் கீழ், 2022இல் 23,500 புலம்பெயர்வோர் அனுமதிக்கப்படலாம் என்ற தகவல் மட்டும் தற்போது கிடைத்துள்ளது.
6. பயண விதிகள்
கொரோனா பரவலைப் பொருத்து கனடாவின் பயண விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இம்மாதம் (ஜனவரி) 15 முதல், கனடாவுக்குள் நுழைய விரும்பும் பயணிகள், குடும்ப உறுப்பினர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் என அனைவரும் கனடாவுக்குள் நுழையும்போது முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.