24 ஆண்டுகளாக கணவனையும் மனைவியையும் பிரித்துவைத்த கொடுமையான புலம்பெயர்தல் பிரச்சினை
புலம்பெயர்தல் பிரச்சினைகளால் 24 ஆண்டுகளாக பிரிந்திருந்த கணவனும் மனைவியும் தற்போது கனடாவில் ஒன்று சேர்ந்துள்ளதைக் குறித்த ஒரு நெகிழவைக்கும் செய்தி இது.
24 ஆண்டுகள் பிரிந்திருந்த தம்பதி
திருமணமாகி 24ஆண்டுகள் ஆகிய நிலையிலும், அந்த தம்பதி இணைந்திருந்த நாட்கள் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். கணவர் பரம்ஜீத் பசந்தி (Paramjit Basanti, 72) கனடாவில் வாழ, மனைவி சரன்ஜீத் பசந்தி (Charanjit Basanti, 55) இந்தியாவில் வாழ்ந்துவந்தார்.
இந்த காதல் தம்பதியர் இப்படி ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டே 24 ஆண்டுகளை கடத்திவிட்ட நிலையில், எப்படியாவது தன் மனைவியை கனடாவுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என பரம்ஜீத் ஐந்து முறை எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன.
(Joel Law/CBC)
2001ஆம் ஆண்டு, முதன்முறையாக மனைவிக்கு வாழிட உரிமம் கோரி பரம்ஜீத் விண்ணபித்தபோது, அவர்களது திருமணம் உண்மையானது அல்ல, கனடாவுக்கு புலம்பெயர்வதை முக்கிய காரணமாக வைத்தே அவர்கள் திருமணம் செய்துள்ளதாக கனடா அதிகாரிகள் கருதியதால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
இப்படியே ஐந்து முறை தோற்று, இப்போது இத்தனை வயதுக்குப் பிறகும் விடாமல் அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றால், நிச்சயம் அது உண்மையான திருமணமாகத்தானே இருக்கமுடியும் என்கிறார்கள் பரம்ஜீத்தின் சட்டத்தரணிகள்.
நெகிழ வைத்த சந்திப்பு
கடைசியாக தம்பதியரின் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. ஆம், சரன்ஜீத்தின் நிரந்தர வாழிட அனுமதி விண்னப்பம் ஏற்றுகொள்ளப்பட்டுவிட்டது.
கடந்த சனிக்கிழமை காலை வான்கூவர் விமான நிலையம் வந்திறங்கிய தன் காதல் மனைவியை முகம் நிறைய சிரிப்புடன் பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து வரவேற்றார் பரம்ஜீத்.
Gurpreet Dhaliwal
கொப்புளித்த கோபம்
ஆனால், சரன்ஜீத்துக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பின் கணவரை சந்தித்த மகிழ்ச்சி இருந்தாலும், அவரது வார்த்தைகளில் தங்கள் திருமண வாழ்வு இத்தனை காலம் வீணாகிப்போனதே என்ற ஆற்றாமை தொனிப்பதை மறுப்பதற்கில்லை.
உங்கள் கணவருடன் இணைய 25 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது, புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே பதிலளித்தாலும், அவரது வார்த்தைகளில் அவரது கோபம் தெளிவாகத் தெரிந்தது.
எங்கள் வாழ்க்கை வீணாகிப்போனது, அதற்கு அவர்கள் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்கிறார் சரன்ஜீத். நாங்கள் சேர்ந்து வாழவேயில்லை, எங்களுக்கு பிள்ளையில்லை, திருமணமாகியும் பிரிந்தே வாழ்ந்தோம், ஒருவரையொருவர் அக்கறையுடன் கவனித்துக்கொள்ளமுடியவில்லை என்கிறார் அவர்.
சட்டத்தரணியின் வருத்தம்
தம்பதியரின் சட்டத்தரணியான Nimrita Kang, தம்பதியர் இத்தனை ஆண்டுகள் விடுமுறையை ஒன்றாக செலவிட்டதையும், தொலைபேசியில் பேசிக்கொண்டதையும், இருவரும் சந்தித்துக்கொண்டதையும், எப்படியாவது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெற்றுக்கொண்டதையும் விசாரணை அதிகாரி கருத்தில் எடுத்துக்கொண்டதால்தான் இம்முறை சரன்ஜீத்தின் நிரந்தர வாழிட அனுமதி விண்னப்பம் ஏற்றுகொள்ளப்பட்டது என்கிறார்.
Martin Diotte/CBC
அவர்களுக்குள் உண்மையான உறவு இல்லையென்றால், ஏன் அவர்கள் இணைவதற்கு இத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்கிறார் அவர்.
இதற்கிடையில், விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை எண்ணி இப்போதும் கவலைப்படும் சரன்ஜீத், தானும் கணவருடன் இணைந்து ஏதாவது வேலை செய்து அதன் மூலம் குடும்ப வருவாய்க்கு தன் பங்கைச் செய்ய விரும்புகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |