மோசடி திருமணம்? கனடாவில் கஷ்டப்படும் புலம்பெயர்ந்தோரின் உண்மை கதை
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் தீபாராணி (Deeparani Harishkumar Dhaliwal, 37). அவரது கணவர் அமன்தீப் சிங் (Amandeep Singh Dhaliwal, 33).
கணவரையும் மகனையும் சந்திப்பதற்காக ஒவ்வொரு முறை இந்தியா சென்று திரும்புவதற்குள் பணப்பிரச்சினையும், உணர்வுகளுடனான போராட்டமுமாக, போதும் போதுமென்று ஆகிவிடுகிறது Mississaugaவில் வாழும் தீபாராணிக்கு.
குடும்பத்தைப் பிரிந்து தனியாக கனடாவில் வாடும் தீபாராணி, இந்தியாவுக்குச் செல்லும் போதெல்லாம் தன் குழந்தையை விட்டுப் பிரியமுடியாமல் இரண்டு மாதங்கள் வரை இந்தியாவிலேயே தங்கிவிடுகிறார்.
சில முறை ஆறு மாதங்கள் வரை இந்தியாவில் தங்கிவிட்டு கனடாவுக்குத் திரும்பினால், பிறகு அவர் புதிய வேலையையும், வாடகைக்கு புதிய வீட்டையும் தேடவேண்டிய நிலைமை உருவாகிவிடுகிறது.
இப்படி சம்பாதிக்கும் பணத்தையெல்லாம், குடும்பத்தைப் பார்ப்பதற்காக பயணத்துக்கே செலவிட்டுவிடுவதால், பெரிதாக எந்த பொருளையும் வாங்கமுடியவில்லை அவரால்.
தீபாராணி வேண்டுமென்றே பணத்தை இப்படி வீணாக செலவிடும் செலவாளியும் அல்ல. அவர் தன் கணவரை கனடாவுக்கு அழைத்துக் கொண்டு வருவதற்காக ஸ்பான்சர் செய்த அவரது விண்ணப்பம் நான்கு முறை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
Toronto Star
காரணம், அது உண்மையான திருமணம் அல்ல, அமன்தீப்பை கனடாவுக்கு கொண்டு வருவதற்காக செய்யப்பட்ட மோசடி திருமணம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
கனடாவில் தன் குழந்தையை கவனித்துக்கொள்ளும் வசதி இல்லாததால், தனது இரண்டு மாதக் குழந்தையை தனது கணவர் மற்றும் மாமனார் மாமியார் வசம் விட்டுவந்தவர் தீபாராணி.
கனடாவில் புலம்பெயர்தல் தொடர்பில் முதலில் ஒரு சட்டம் இருந்தது. அதாவது, ஒருவரது திருமணம் உண்மையானது அல்ல, மற்றும், விண்ணப்பதாரர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்காகவே திருமணம் செய்துள்ளார் என்றால், அவரது விண்ணப்பத்தை புலம்பெயர்தல் அலுவலகம் நிராகரித்துவிடும்.
ஆனால், இப்போது அந்த சட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருவரது திருமணம் உண்மையானது அல்ல, அல்லது, விண்ணப்பதாரர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்காகவே திருமணம் செய்துள்ளார் என்றால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடும்.
பிரச்சினை என்னவென்றால், தீபாராணி இந்து மதத்தைச் சேர்ந்தவர், அமன்தீப் சீக்கியர். தீபாராணி பட்டதாரி, அமன்தீப் பல்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காதவர்.
தீபாராணி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், அமன்தீப்புக்கு இது முதல் திருமணம். மேலும் தீபாராணி தனது முதல் திருமணம் விவாகரத்தானதை முறைப்படி பதிவு செய்யவில்லை.
ஆகவே, கனடா சட்டப்படி இந்த திருமணம் செல்லாது. ஆக, இப்படி பல பிரச்சினைகள் இருப்பதாலேயே அமன்தீப்பின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆனால், ஒருவரை கனடாவுக்கு கொண்டுவருவதற்காக யாராவது குழந்தை எல்லாம் பெற்றுக்கொள்வார்களா என்கிறார் தீபாராணி.
ஆனாலும், பலமுறை மேல்முறையீடு செய்தும் அமன்தீப்பின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சினிமாக்களில் பார்ப்பதுபோல, அப்படியானால் தீபாராணி இந்தியாவுக்கே திரும்பிப் போய்விடலாமே என்று நினைக்கலாம்.
ஆனால், நடைமுறையில் அதுவும் எளிதல்ல, ஒருபக்கம் இதுவரை செய்த செலவு, மறுபக்கம் ஊருக்குச் சென்றால், உன் மனைவி கனடாவுக்கு போய் இத்தனை ஆண்டுகள் ஆகிறது, இன்னமும் நீ போகவில்லையா என அமன்தீப்பை கேலி செய்கிறார்களாம் அக்கம்பக்கத்தவர்கள்.
ஆக, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதும் தீபாராணி விடயத்தில் எளிதல்ல. ஆகவே, விடாமல் போராடுவது என்று முடிவு செய்திருக்கிறார் அவர்.