கொரோனா காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்... கனேடிய புலம்பெயர்தல் திட்டமிடுதலில் ஏற்படுத்தும் தாக்கம்
புலம்பெயர்தல் கொள்கை உருவாக்குபவர்களும், பகுப்பாய்வு செய்பவர்களும், நீண்ட கால புலம்பெயர்தல் திட்டமிடுதலில் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் என்னும் விடயத்தை ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகப் பார்க்கிறார்கள்.
கொரோனா போன்ற கொள்ளைநோய் காலகட்டம் காரணமாக குழந்தை பிறப்பு வீதம் குறைதல், கனடாவின் தொழிலாளர் சந்தையில் 25 ஆண்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, கனடாவில் பிறந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்கு செல்ல அவ்வளவு காலம் ஆகும் என்பது அதன் பொருள்.
சில நேரங்களில், கனடாவின் குழந்தைகள் பிறப்பு வீதம், அதன் அதிகரிக்கும் புலம்பெயர்தல் அளவை பொருளாதார ரீதியில் நியாயப்படுத்தும் விடயமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதாவது, கனடாவின் மக்கள்தொகையையும், அதன் தொழிலாளர் தேவையையும் சந்திக்கும் அளவில் கனடாவில் போதுமான அளவில் குழந்தைகள் பிறக்கவில்லை என்று பொருள்.
ஆகவே, கனடாவில் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப புதிய பணியாளர்கள் வரவில்லையென்றால், கனடாவின் தொழிலாளர் சக்தி குறைந்துவிடும் என்பதால், பொருளாதாரப் புலம்பெயர்தல் இந்த பிரச்சினைக்கான தீர்வாகப் பார்க்கப்படுகிறது.
அப்படி கனடாவின் தொழிலாளர் சக்தி குறைந்துவிட்டால், உலக அளவில் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், மற்ற நாடுகளுடன் போட்டியிடும் திறனும் பாதிக்கப்படும்.
கனடாவில் புள்ளிவிவரங்கள் துறை, கொரோனா காலகட்டம் எப்படி கனடாவில் குழந்தை பிறக்கும் எண்ணிக்கையை பாதித்துள்ளது என்பதைக் காட்டும் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அதன்படி, கடந்த ஆண்டில் கனடாவில் குழந்தை பிறப்பு வீதம் மிகவும் குறைவாக இருந்தது. அத்துடன், 2006க்குப் பிறகு, கடந்த ஆண்டில்தான் கனடாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம் பார்த்தால், கொரோனா காலகட்டத்தில் மட்டும் என்று கூறமுடியாதபடி, 2008இலிருந்தே கனடாவில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ச்சியாக குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படியே போனால், வரும் ஆண்டுகளில் கனடா மிகக் குறைவாக குழந்தைகள் பிறக்கும் நாடாக ஆகிவிடலாம்.
கனேடியர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது
15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடையில் உள்ளவர்களில் கால்வாசிப்பேர் கொரோனா காலகட்டம் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தள்ளிப்போட்டிருக்கிறார்கள்.
சுமார் 20 சதவிகிதம் பேர், தாங்கள் முன்பு விரும்பியதை விட குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்ள இருப்பதாகவோ, அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட இருப்பதாகவோ தெரிவித்துள்ளார்கள். வெறும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே விரைவில் அல்லது அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
கொரோனா காலகட்டம் காரணமாக, குழந்தைகள் வேண்டாம் என்று இல்லாமல், குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடவேண்டும் என்ற எண்ணம்தான் மக்களிடம் பொதுவாக காணப்படுகிறது. இந்த ஆய்வு, இந்த விடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறது.
காரணம், கனேடிய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சராசரி வயது 31. ஆகவே, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவதால், உடல் ரீதியான காரணங்களால், சில பெண்களால் திட்டமிட்டபடி அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகலாம்.
இன்னொரு விடயம், பெரும்பாலும், வெளிப்படையாக சிறுபான்மையினர் என கருதப்படுவோரே, குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்ள அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட விரும்புகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக, வேலையின்மை, நிதிப்பிரச்சினைகள் முதலான பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.
அமெரிக்காவிலும் இதேபோல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வும் இதே கருத்தைக் கூறுகிறது. ஆனால், அமெரிக்க ஆய்வைப்போல் இல்லாமல், கனேடிய புலம்பெயர்தல் நிலை, குழந்தை பெறுதல் தொடர்பான திட்டங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
கனேடியர்களைப் பொருத்தவரை, பெரும்பாலானவர்கள் குறைவான குழந்தைகள் பெற முடிவு செய்யாமல், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட மட்டுமே விரும்புவதால், கொரோனா காலகட்டம் எதிர்காலத்தில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கையை பெரிய அளவில் பாதிக்காமல் இருக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு கருதுகிறது.
அதாவது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட முடிவு செய்த பெற்றோர்கள், தங்கள் திட்டப்படி எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில்!