உக்ரைன் போரால் சுவிட்சர்லாந்தில் பொருட்களின் விலைவாசியில் ஏற்பட்டுள்ள தாக்கம்
சுவிட்சர்லாந்தில் விலைவாசி அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான்.
ஆனால், கடந்த சில மாதங்களாக விலைவாசி மேலும் அதிகரித்து வருகிறது.
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முதலாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல், கோவிட் பெருந்தொற்றால் உருவான நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதால் பணவீக்கம் உருவானது.
அது போதாதென, சமீபத்தில் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதால் மூலப்பொருட்களின் விலை உயர, மீண்டும் பணவீக்கம் அதிகரித்து முக்கிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
எந்தெந்த பொருட்களின் விலை மிக அதிகரித்துள்ளது?
பணவீக்கம் மற்றும் போர் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள துறை ஆற்றல் துறை.
இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் வெப்பமுண்டாக்கப் பயன்படும் எண்ணெய் ஆகியவற்றில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற பொருட்களின் விலை நிலவரம் எப்படி உள்ளது?
உணவு மற்றும் மதுபானங்கள் அல்லாத பானங்களின் விலை சற்றே உயர்ந்துள்ளது.
என்றாலும், சராசரியாக பார்க்கும்போதுதான் இந்த விலை உயர்வு. தனித்தனியே பார்த்தால், சில பொருட்கள் குறிப்பாக காபி, பாஸ்தா ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது, பழங்கள் போன்ற பொருட்களில் விலை கொஞ்சம் குறைந்துள்ளது.
ஆனால், பாண் விலையைப் பார்க்கும்போது, பிரச்சினை கொஞ்சம் அதிகமாகும் போலத்தான் உள்ளது.
உக்ரைன், breadbasket of Europe என்று அழைக்கப்படுகிறது. காரணம், உலகின் கோதுமை விநியோகத்தில் 12 சதவிகிதம் உக்ரைனிலிருந்துதான் வருகிறது.
அத்துடன், உக்ரைன் அதிக அளவில் மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றுமாகும்.
ஆனாலும், சுவிட்சர்லாந்தின் கோதுமைத் தேவையில் 3 சதவிகிதம் மட்டுமே நேரடியாக உக்ரைனிலிருந்து வருகிறது. மீதம், உள்ளூரிலிருந்து அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகிறது.
இருந்தபோதிலும், உக்ரைன் பிரச்சினை நீடிக்குமானால், பாண் மற்றும் பிறகோதுமை தயாரிப்புகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்களுக்குத் பிரச்சினை ஏற்படலாம். காரணம், அவற்றைத் தயாரிக்க (ரஷ்யாவிலிருந்து வரும்) இயற்கை எரிவாயு அவசியம்!