சுவிட்சர்லாந்துடனான உறவில் பாதிப்பு? முக்கிய அமைப்பு கருத்து
சுவிட்சர்லாந்துடனான தங்கள் உறவு நிலைகுலையலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உள் சந்தையில் சுவிட்சர்லாந்தின் இடம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் பட்சத்தில், சுவிட்சர்லாந்துடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவில் பிரிவு ஏற்படலாம் என ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவரான Maros Sefcovic தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு அல்ல. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களே இரு தரப்புக்கும் இடையிலான பொருளாதார உறவை நிர்வகிக்கின்றன.
அந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் கொடுவரவும், சுவிட்சர்லாந்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை விதிகளை ஏற்றுக்கொள்ளவைப்பதற்காகவும், ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தனது இறையாண்மையை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிக அளவில் விட்டுக்கொடுப்பதாக கருத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த மே மாதம் தோல்வியில் முடிந்தன.
ஆக, தற்போது புதிதாக துவங்கும் பேச்சுவார்த்தைகளிலும் வெற்றி கிடைக்கவில்லையென்றால், இரு தரப்பு ஒப்பந்தங்களும் மெல்ல காலாவதியாகி, ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையில் உறவில் பிரிவு ஏற்பட்டுவிடும் என்கிறார் ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவரான Maros Sefcovic.
ஆகவே, சுவிட்சர்லாந்து புதிய பேச்சுவார்த்தைகளை முழு மனதுடன் மேற்கொள்ள விரும்பினால், அது ஐரோப்பிய ஒன்றிய உள் சந்தை விதிகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கவேண்டும் என்கிறார் Sefcovic.
ஐரோப்பிய ஒன்றியம், இருதரப்பு பிரச்சினைகளை தீர்ர்ப்பது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒழுங்காக நிதி வழங்குவது ஆகிய விடயங்கள் தொடர்பில், தனது சட்டத்துக்கு ஏற்ப, சுவிட்சர்லாந்தும் அதன் சட்டங்களை சமமாக்கிக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறது.
ஆனால், சுவிட்சர்லாந்தோ, தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிபந்தனைகள் எதுவும் இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை தொடரவேண்டும் என கருதுகிறது.