ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, பிரித்தானியா முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.
பிரித்தானியா முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அதாவது, பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கும், ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கும் பெரிதும் உதவியாக இருந்த தடையில்லாப் போக்குவரத்தும் முடிவுக்கு வந்தது.
அந்த நேரத்தில், இரு தரப்புக்கும் இடையிலான பிரிவு நாளுக்கு முன்பே ஜேர்மனிக்கு வந்து விட்டிருந்த பிரித்தானியர்கள், Aufenthaltstitel-GB என்று அழைக்கப்படும் வாழிட அனுமதி நிலை அட்டை (residency title card) ஒன்றிற்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள்.
இந்த அட்டை, ஒருவர் ஜேர்மனியில் தற்காலிகமாக தங்குவதற்காக வந்திருக்கிறாரா, நிரந்தரமாக குடியமர்வதற்காக வந்திருக்கிறாரா, அல்லது ஒரு நிறுவனத்தின் சார்பில் ஜேர்மனியிலிருக்கும் அந்த நிறுவனத்தின் கிளைக்கு இடமாறுதல் பெற்று வந்திருக்கிறாரா என்பது போன்ற விவரங்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.
ஆனால், கடந்த மே மாதம் வரை, பல பிரித்தானியர்கள் அந்த அட்டை பெறுவதற்காக தங்களுக்கு அப்பாயிண்ட்மெண்டே கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்கள்.
ஆகவே, அந்த பிரித்தானியர்கள் அப்பாயிண்ட்மெண்ட் பெற நேரம் கொடுக்கும் வகையில், உள்துறை அமைச்சகம், 2022 துவங்கும்வரை, பிரித்தானிய பணியாளர்களிடம் வாழிட அனுமதி நிலை அட்டையை, எந்த விடயத்துக்கும் ஆதாரமாக கேட்கவேண்டாம் என அனைத்து பணி வழங்குவோருக்கும் தெரிவிக்கும் வகையில் வெளிப்படையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. வாழிட அனுமதி தொடர்பில் பிரித்தானியர்கள் சொல்வதை மட்டும் நம்பி ஏற்றுக்கொள்ளுமாறு பணியாளர்களை ஜேர்மனி அரசு கேட்டுக்கொண்டது.
ஆனால், அந்த ‘நம்பும் காலகட்டம்’ இந்த டிசம்பருடன் முடிவடைய இருப்பதால், இனி, பணி வழங்குவோர், பிரித்தானியர்களிடம் அந்த வாழிட அனுமதி நிலை அட்டையை கேட்க நேரிடலாம்! ஆகவே, வாழிட அனுமதி நிலை அட்டை உங்களிடம் இருப்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.
இந்த அட்டை உள்ளதா இல்லையா என்பது பயணத்தை பாதிக்குமா?
பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்குள் நுழையும்போது, உங்களிடம் வாழிட அனுமதி நிலை அட்டை இருந்தால் நல்லது, இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை என எல்லை பொலிசாரின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாழிட அனுமதி நிலை அட்டைக்கு பதிலாக வாடகை ஒப்பந்தம், பணி ஒப்பந்தம் முதலான ஆவணங்களைக் காட்டியும் ஜேர்மனிக்குள் பிரித்தானியர்கள் நுழையலாம்.
ஜேர்மனியில் பணி செய்வதை வாழிட அனுமதி நிலை அட்டை பாதிக்குமா?
உங்களிடம் வாழிட அனுமதி நிலை அட்டை இல்லை என்னும் விடயம் நீங்கள் ஜேர்மனியில் பணி செய்யும் உரிமையை பாதிக்காது.
ஆனாலும், கேட்ட இடத்தில் காட்டுவதற்கு உங்களிடம் வாழிட அனுமதி நிலை அட்டை இருந்தால், அது உங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை எளிதாக்கும். அத்துடன், அடுத்த ஆண்டிலிருந்து, பிரித்தானியர்களுக்கு பணி வழங்குவோர் வாழிட அனுமதி நிலை அட்டையைக் கேட்க அதிக வாய்ப்புள்ளது என்பதால், தேவையற்ற தலைவலியை தவிர்க்கலாம்தானே!