மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரித்தானியா இளவரசர் பிலிப் குறித்து வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசர் பிலிப் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியா மகாராணி எலிசபெத்தின் 99 வயதான கணவரான இளவரசர் பிலிப், நான்கு வார சிகிச்சைக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை லண்டன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இளவரசர் பிலிப் பிப்ரவரி 16 அன்று கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், கொரோனா பாதிப்பில்லை என உறுதிசெய்யப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் அவர் மற்றொரு லண்டன் மருத்துவமனையில் உள்ள சிறப்பு இருதய மையத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு அவருக்கு முன்பே இருக்கும் இதய பிரிச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், செவ்வாயன்று 10.30 GMT-க்குப் பிறகு இளவரசர் பிலிப் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் பக்கிங்காம் அரண்மனை தரப்பிலிருந்து உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
