ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நலம் குறித்து வெளியான முக்கிய தகவல்! 2021 ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்
காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நலம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் களதடுப்பின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து விலகினார்.
அதேசமயம் டெல்லி அணி கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், 2021 ஐபிஎல் தொடரில் முதல் பாதி வரை பங்கேற்பது சந்தேகம் என கூறப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் அவர் 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர் அடுத்த வாரம் பரிசோதிக்கப்படுவார் என்றும் அதன் பின் திகதி முடிவு செய்யப்படும் என ANI வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு 2 வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை நடக்க வாய்ப்புள்ளது எனவும், அவர் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்க 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால், 2021 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பண்ட் டெல்லி அணி கேபட்னாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
