ஆண்டின் முதல் இரு வாரங்களில்... பிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
2021 ம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 900 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகள் பெருமளவு குறைந்து வந்தாலும், இறப்பு எண்ணிக்கை தொடர்பில் நம்பிக்கை அளிக்கும் வகையில் எந்த மாறுதலும் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனவரி மாதம் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சராசரியாக 1,000 பேர் ஒவ்வொரு நாளும் இறந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கடைசி இரு வாரங்களிலேயே இவ்வாறாக மிக மோசமான இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
பிரித்தானியாவில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டது ஜனவரி 30, 2020 என பதிவாகியுள்ள நிலையில், தற்போது ஓராண்டுக்கு பின்னர் இந்த இறப்பு எண்ணிக்கை தொடர்பான புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 120,000 கடந்துள்ளது.
பிரித்தானியாவில் மே மாதம் 23 வரையான முதல் கொரோனா அலை காலகட்டத்தில் மொத்தம் 50,000 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
அதன் பின்னர் 6 மாதங்கள் கடந்து, நவம்பர் 26 ம் திகதி இந்த எண்ணிக்கை 75,000 என பதிவாகியுள்ளது.
ஆனால் அடுத்த 6 வாரங்களில் இந்த எண்ணிக்கை 100,000 தொட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 15 வரையான இரண்டு வாரத்தில் குறைந்தது 13,876 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் நாட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 600,000 பொதுமக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை கொரோனாவால் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.