இலங்கையில் பிறந்த கனேடியருக்கு அமெரிக்காவில் 32 மாதங்கள் சிறைத்தண்டனை
இலங்கையில் பிறந்த கனேடியர் ஒருவருக்கு மனிதக் கடத்தல் வழக்கில் அமெரிக்காவில் 32 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோகன், ரிச்சி என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ கஜமுகம் செல்லையா (55) என்ற கனேடியர், சுய லாபத்துக்காக அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்களை கடத்திக் கொண்டு வந்ததாக பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஒப்புக்கொண்டார்.
பணத்துக்காக, இலங்கையிலிருந்து ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரை கரீபியன் வழியாக அமெரிக்காவுக்குள் கொண்டுவர சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சுமார் 158 புலம்பெயர்ந்தோருடன் படகு ஒன்றில் அமெரிக்காவுக்கு செல்ல முயன்றபோது செல்லையா Turks and Caicos நாட்டு அதிகாரிகளிடம் சிக்கினார். ஓராண்டு அங்கு சிறைவாசம் அனுபவித்தபின்பு, 2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 17ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
செல்லையா, ஏராளம் இலங்கையர்களை பணம் வாங்கிக்கொண்டு Turks and Caicos தீவிலிருந்து பஹாமாஸ் மற்றும் அமெரிக்கா வழியாக கனடாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக தாங்கள் நம்புவதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்திருந்தது.
ஆகவே, அமெரிக்காவுக்கு வெளிநாட்டவர்களை கொண்டுவர சதித்திட்டம் தீட்டியதாக ப்ளோரிடாவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் செல்லையா.
இந்நிலையில், அவர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 32 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.