லண்டனில் பெண்ணை கத்தியால் குத்திக்கொண்டிருந்தவரை தடுக்க காரை மோதிய நபர்: விபரீதத்தில் முடிந்த சம்பவம்
லண்டனில், பெண் ஒருவரை கத்தியால் குத்திக்கொண்டிருந்த நபரைத் தடுப்பதற்காக, அவர் மீது ஒருவர் தனது காரை மோத, இப்போது இரட்டைக் கொலை வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார் அந்த ஆபத்பாந்தவன்!
நேற்று காலை, வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Maida Vale என்ற இடத்தில், 41 வயதுள்ள ஆண் ஒருவர், 43 வயதுள்ள பெண் ஒருவரை, பட்டப்பகலில், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் பெரிய கத்தி ஒன்றால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.
பிள்ளைகள் பயந்து அலறி ஓட, அந்தப் பெண் உதவி, உதவி, என கதற, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் உதவ நெருங்கும்போது, யாரும் என் அருகே வரக்கூடாது என அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்ட, அந்த பகுதியே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது.
அப்போது, சட்டென தனது காரில் ஏறிய ஒருவர், தனது காரைக் கொண்டு கத்தியால் குத்திக்கொண்டிருந்த ஆண் மீது மோதியிருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, குத்தப்பட்ட பெண்ணும் காருக்கடியில் சிக்கிகொண்டிருக்கிறார்.
உடனடியாக அருகில் நின்ற சிலர் சேர்ந்து காரைத் தூக்கி, அந்தப் பெண்ணை காருக்கடியிலிருந்து எடுத்து, அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண் உடலில் பத்துக்கும் மேற்பட்ட கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததால், அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்கும்போதும் இரத்தம் பயங்கரமாக வெளியேறத் துவங்கியிருக்கிறது.
மருத்துவ உதவிக் குழுவினர் வந்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதற்கிடையில், கார் மோதியதில் கத்தியால் குத்திக்கொண்டிருந்த நபரும் உயிரிழந்துவிட்டார்.
ஆகவே, காரைக் கொண்டு அவரை மோதிய 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்களோ, தங்களில் பலர் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றும், அவரைக் குத்திக்கொண்டிருந்தவர், கொடூரமாக, வாங்கிக் கொள், வாங்கிக் கொள் என்று கத்தியபடி, அவரைக் குத்திக்கொண்டிருந்ததாகவும், அருகே நெருங்க முயன்ற தங்களைக் கத்தியுடன் துரத்தியதாகவும், அப்போது அந்த கார் சாரதிதான் ஆபத்பாந்தவனாக அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வந்ததாகவும் கூறியுள்ளார்கள்.
எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில், அந்த காரைக் கொண்டு மோதியவரால்தான் அந்த கத்தி வைத்திருந்தவரைத் தடுக்க முடிந்தது என பலர் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகாவிட்டாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.