ஒரே இரவில் லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய சம்பவம்: பொதுமக்கள் உதவியை நாடிய அதிகாரிகள்
தெற்கு லண்டனில் நேற்று ஒரே இரவில் மட்டும் 5 இடங்களில் நடந்த கத்திக்குத்து வன்முறை சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 10 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
தேசிய ஊரடங்கும் அமுலில் இருந்து வரும் நிலையில், நேற்று இரவு குரோய்டன் பகுதியில் மட்டும் 5 கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
சுமார் 3 மணி நேர இடைவெளியில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவங்களில் ஒருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் இருந்து வரும் இச்சம்பவங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பதில் உறுதியான தகவல் ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முதல் கத்திக்குத்து சம்பவம் மாலை 6.56 மணியளவில் சாப்மேன் சாலையில் நடந்தது, அதில் ஒருவர் காயமடைந்தார்.
இதன் பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு கத்திக்குத்து காயங்களுடன் நால்வர் குரோய்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 8 மணியளவில் விஸ்பீச் சாலையில் ஒரு தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
8.51 மணிக்கு நடந்த ஒரு கத்திக்குத்து வன்முறை சம்பவத்தில் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 9.12 மணிக்கு டிங்வால் சாலையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார் என தெரிய வந்துள்ளது.
இதனிடையே, பிப்ரவரி 6 சனிக்கிழமை காலை 8 மணி வரை குரோய்டன் முழுவதும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொள்ளும் கூடுதல் அதிகாரங்களை காவல்துறைக்கு வழங்கும் பிரிவு 60 ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவுமாறு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

