வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காகப் புறப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இலங்கையில் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
2024 செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 நபர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளமையினால், இலங்கையர்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 10% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக SLBFE சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களுக்குள் 240,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளனர்.
இதில் 99,939 பெண்களும் 142,170 ஆண்களும் உள்ளடங்குவதாக அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு வேலைக்காகப் புறப்பட்ட மொத்த திறமையான தொழிலாளர்களின் எண்ணிக்கை 70,396 ஆகவும், 3,704 பேர் அரை திறன் கொண்ட வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.
SLBFE வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சவுதி அரேபிய இராச்சியத்தில் வேலை வாய்ப்புகளை நாடியுள்ளனர்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 6,391 இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைக்காகப் புறப்பட்டுள்ளனர். அதேவேளையில் 6,295 நபர்கள் ஜப்பானுக்கும் 5,870 பேர் தென் கொரியாவிற்கும் சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |