பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... இந்த வார இறுதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்
பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அதன்படி, இரவு விடுதிகள், இந்த வார இறுதியிலிருந்து நான்கு வாரங்களுக்கு மூடப்பட உத்தரவிடப்பட உள்ளது.
பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்து, அதனால் மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாக்கப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில், இந்த வார இறுதியிலிருந்து நான்கு வாரங்களுக்கு இரவு விடுதிகள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளம் வயதினரிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியர் சமூக விலகல் விதிகளை கடுமையாக பின்பற்றுதல், மாஸ்க் அணியும் கட்டுப்பாடு கடுமையாக்கப்படுதல் ஆகிய விதிகள் அமுல்படுத்தப்பட இருப்பதாகவும் பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார் (அவரே, கொரோனா தொற்றுக்கு ஆளாகி, தனிமைப்படுத்தலிலிருந்து கடந்த வாரம்தான் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது).
அதே நேரத்தில், அண்மை நாடுகளைப்போல தடுப்பூசி பெறாதவர்களைக் குறிவைத்து தனியாக கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதிக்கவில்லை.
அதற்குப் பதிலாக, பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணி செய்வதை பணி வழங்குவோர் ஊக்குவிக்குமாறும், அலுவலக பார்ட்டிகள் போன்ற மக்கள் கூடும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் Castex கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கிறிஸ்துமஸ் சந்தைகளில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் உணவு உண்ணுவதற்கும் சுகாதார பாஸ் அவசியம் என்றும் கூறியுள்ளார் Castex.
அதே நேரத்தில், இது பொது முடக்கம் அறிவிப்பதற்கான நேரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், கடந்த குளிர்காலம் மற்றும் இளவேனிற்காலத்திலும் இரவு விடுதிகள் மூடப்பட்டு கடும் வருவாய் இழப்பு நேரிட்ட நிலையில், தற்போது மீண்டும் இரவு விடுதிகள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளதால் இரவு விடுதி உரிமையாளர்கள் கடும் கோபமடைந்துள்ளார்கள்.