சக மாணவிகளை கொலை செய்யும் கலாச்சாரம் அதிகரிப்பு... பிரான்சைத் தொடர்ந்து கனடாவில் ஒரு கோர சம்பவம்
பள்ளியில், உடன் பயிலும் மாணவ மாணவிகளுடன் பிணக்கு வருவது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கம்தான். ஆனால், அப்போதெல்லாம் ஒன்றில், பள்ளியிலேயே அந்த பிரச்சினை முடிந்துவிடும், அல்லது வாய்ச்சண்டை இருக்கும், அல்லது, நீண்ட நாட்களுக்கு இருவரும் ஒருவருடன் மற்றவர் பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள் அவ்வளவுதான்.
ஆனால், இப்போது ஒரு புது கலாச்சாரம் உருவாகியுள்ளது. வகுப்பு முடிந்து வீடு திரும்பினாலும், இணையம் வாயிலாக மிரட்டுவது, வெளியே வரச்சொல்லி தாக்குவது.
அப்படித்தான் ஒரு மாணவனும் மாணவியும் சேர்ந்து தங்கள் சக மாணவி ஒருவரை அடித்து, ஆற்றில் வீசிக் கொன்றுவிட்டார்கள் பிரான்சில்.
அமெரிக்காவில், சிறுமி ஒருத்தியைக் கொலை செய்ததாக 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அந்த வரிசையில், இப்போது கனடாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
Leduc என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பயிலும் Jennifer Winkler (17) என்ற மாணவியை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
Jennifer உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Jenniferஐ கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 19 வயது மாணவர் ஒருவர் ஓரிடத்தில் மறைந்திருந்த நிலையில், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
கொலையுண்ட Jenniferம் கொலை செய்த மாணவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என பொலிசார் தெரிவித்தாலும், அவர்களுக்குள் என்ன உறவு என்பது தெரியவில்லை.
இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டுள்ளது. பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.