சுவிட்சர்லாந்தில் ரஷ்ய ஹெச்.ஐ.வி நோயாளிக்கு ஏற்பட்டுள்ள நிலை: ரஷ்யர்களுக்கெதிராக அதிகரிக்கும் வெறுப்பு
சுவிட்சர்லாந்தில் ரஷ்யர்களுக்கெதிரான வெறுப்பு அதிகரித்து வருவது போல் தோன்றுகிறது.
அதை உறுதி செய்வது போல் சமீபத்தில் சில சம்பவங்கள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாஸ்கோவில் வாழும் 50 வயதுடைய ரஷ்யர் ஒருவர், ஹெச்.ஐ.வி சிகிச்சைக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்துக்கு வந்துபோய்க்கொண்டு இருந்திருக்கிறார்.
ஆனால், இனி அவருக்கு சிகிச்சை அளிக்கமுடியாது என அவரது அவரது மருத்துவர் கூறிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைனில் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவில் வாழும் எந்த நோயாளிக்கும் தான் சிகிச்சை அளிக்கமாட்டேன் என சூரிச்சில் மருத்துவமனை நடத்திவரும் அந்த மருத்துவர் கூறிவிட்டதாக Blick செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இருந்தாலும், யாருக்காவது உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில், அவர் யார், எந்த நாட்டவர் என்றெல்லாம் பார்க்காமல் சிகிச்சையளிக்க தங்கள் மருத்துவமனை தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடயம் அத்துடன் நிற்கவில்லை, ரஷ்யர்களுக்கெதிரான வெறுப்பு மென்மேலும் அதிகமாகிவருவதாக Russia Chamber of Commerce என்ற அமைப்பின் சுவிஸ் பிரிவு தலைவரான Svetlana Chiriaeva என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வயதான ரஷ்ய பெண்கள் மீது எச்சில் துப்பப்படுவதாகவும், ரஷ்ய குழந்தைகள் பள்ளிகளில் வம்புக்கிழுக்கப்படுவதாகவும் தனக்குத் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புடின் மற்றும் அவரது ஆதரவு கோடீஸ்வரர்களுக்கெதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை தன்னால் புரிந்துகொள்ளமுடிகிறது என்று கூறியுள்ள Svetlana, ஆனால், அப்பாவி மக்களும் தற்போது இந்த தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தானே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள Svetlana, தன்னால் மாஸ்கோவிலுள்ள தன் வயது முதிர்ந்த தந்தைக்கு மருந்துகள் கூட பார்சலில் அனுப்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.