வங்கதேசத்தை பழிதீர்த்த இந்திய அணி! 188 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இமாலய இலக்கு
சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 404 ஓட்டங்களும், வங்கதேசம் 150 ஓட்டங்களும் முதல் இன்னிங்சில் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் வங்கதேசத்திற்கு 513 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் ஜாகிர் ஹசன் 100 ஓட்டங்களும், ஷண்டோ 67 ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.
ஆனால் பின்னர் வந்த யாசிர் அலி (5), லித்தன் தாஸ் (19), முஷ்பிஃகுர் ரஹிம் (23) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
அக்சர் - குல்தீப் அபார பந்துவீச்சு
கேப்டன் ஷகிப் அல் ஹசன் மட்டும் ஒருபுறம் போராட, இதர வீரர்கள் அக்சர் படேல் மற்றும் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 8வது விக்கெட்டாக ஆட்டமிழந்த ஷகிப் அல் ஹசன் 84 ஓட்டங்கள் எடுத்தார்.
வங்கதேச அணி 324 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 188 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் பழிதீர்த்துக் கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 22ஆம் திகதி டாக்காவில் நடைபெற உள்ளது.