பழி தீர்த்துக் கொண்ட அவுஸ்திரேலியா: தொடரை கைப்பற்றி அசத்திய இந்திய அணி
இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலியா
இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்று அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து விளையாட தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
150வது போட்டியில் விளையாடும் டேவிட் வார்னர் 56 ஓட்டங்கள் குவித்து அசத்தினார், அதே சமயம் மறுமுனையில் அதிரடியாய் வெடித்து கொண்டு இருந்த மார்ஷ் 96 ஓட்டங்கள் குவித்து குல்தீப் யாதவ் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து சதத்தை தவறவிட்டார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 74 ஓட்டங்களும், மார்னஸ் லாபுசாக்னே 72 ஓட்டங்களும் குவித்து அணியின் ஓட்டத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ஓட்டங்கள் குவித்து இந்திய அணிக்கான இலக்கை நிர்ணயித்தது.
அவுஸ்திரேலியா வெற்றி
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
57 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் மொத்தம் 81 ஓட்டங்கள் குவித்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
விராட் கோலி தன் பங்கிற்கு 56 ஓட்டங்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்கள், ரவீந்திர ஜடேஜா 35 ஓட்டங்கள் இந்திய அணிக்காக சேர்த்தனர். ஆனால் பெரிய ஓட்டங்களை இந்திய வீரர்கள் குவிக்க தவறியதால் 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதனால் இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்ததால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |