இலங்கை அணியை சூறையாடிய சூர்ய குமார் யாதவ்: டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணி அசத்தல்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை-இந்தியா மோதல்
இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில் இன்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 228 ஓட்டங்கள் குவித்தது.
229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் இந்தியா தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
சதம் விளாசிய சூர்ய குமார் யாதவ்
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 1 ரன்களில் வெளியேறி இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 36 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தார்.
இதையடுத்து களத்தில் இறங்கிய சூர்ய குமார் யாதவ் இலங்கை அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.
51 பந்துகளை எதிர்கொண்ட சூர்ய குமார் யாதவ் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் விளாசி 112 ஓட்டங்கள் அதிரடியாக குவித்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் சூர்ய குமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.