இந்த மூன்று நபர்களே இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம்: கேப்டன் ரோஹித் சர்மா பேச்சு!
இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு ஜஸ்பிரிட் பும்ராவை துணை கேப்டனாக அறிவித்து இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டி நாளை தொடங்கவுள்ளது, இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ராவை இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அணியை தலைமை தாங்குவதற்கு அவர் பேட்மேன்னா அல்லது பந்துவீச்சாளரா என்பது முக்கியம் இல்லை, அவரின் கிரிக்கெட் அறிவு எத்தகையது என்பதே முக்கியம்.
அந்த வகையில் நான் அருகில் இருந்து பும்ராவை நன்கு கவனித்துள்ளேன். அவருக்கு நல்ல கிரிக்கெட் அறிவு இருப்பதால் அவரை துணை கேப்டனாக அறிவித்து இருப்பது அவரது தலைமை பண்புகளை மேலும் வலுப்படுத்தி இந்திய அணிக்கு கூடுதல் பக்கபலமாக வரும் காலங்களில் அமையும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல், பந்த் மற்றும் பும்ரா ஆகியோர்க்கு கேப்டன் பொறுப்புகளை இப்போதே வழங்குவதன் மூலம், வருங்காலத்தில் இந்திய அணிக்கான நல்ல கேப்டனை கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.