வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லுமா இந்தியா? - 2வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 1000வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுவதால் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த போட்டியில் ரோகித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர்/ தீபக் சாஹர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.