டி20 தொடரை வென்று அசத்தியது இந்தியா - கடைசி நேரத்தில் பயம் காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 போட்டி தொடரை இந்திய் அணி வென்று அசத்தியுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே 2வது போட்டி இன்று அதே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் தலா 52 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 33 விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிக்கோலஸ் பூரன், ரோவ்மென் பவல் இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். மோசமான இந்திய அணியின் ஃபீல்டிங்கால் கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுமோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.
ஆனால் கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் கட்டுக்கோப்பாக வீச 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.