இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் தொடக்கம் - எங்கே தெரியுமா?
சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம், ஆந்திராவில் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம்
சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோன்னகிரி பகுதியில் அதன் வணிக செயல்பாட்டை துவங்கியுள்ளது.

நேற்று, ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த தங்க சுரங்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த சுரங்கமானது, த்ரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் ஆதரவுடன், ஜியோமைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டெக்கான் கோல்டு மைனிங் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
இதற்காக, மாநில அரசு சுமார் 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதில், 600 ஏக்கர் அளவிலான சுரங்க பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார். மேலும், 2 ஆம் கட்ட பணிகளுக்காக அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த தங்க சுரங்கத்தில் இருந்து முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு, 900 கிலோ தங்கம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின், ஆண்டுக்கு, 2,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் அளவுக்கு திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம், தற்போது சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில், 85% அதிகமாக உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த சுரங்கத்தில் உற்பத்தியாகும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீதம் ராயல்டி தொகையாக மாநில அரசு பெற உள்ளது. அதாவது, அரசு ஆண்டுக்கு ரூ.57 கோடி வருவாயை எதிர்பார்க்கிறது. மேலும் உற்பத்தி 900 கிலோவை எட்டியவுடன் இந்த வருவாய் ரூ.144 கோடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தங்கம் இறக்குமதி ஆண்டுக்கு 800 முதல் 1000 டன்னாக உள்ளது. ஜொன்னகிரியில் ஆண்டுக்கு ஒன்று முதல் 1.3 டன் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இது நாட்டின் தேவையில் 0.1 சதவீதம் மட்டும்தான் என்பதால், இந்தியாவின் தங்க இறக்குமதி தேவையையும் பெரிதாக நிறைவு செய்துவிடாது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |