யூடியூபர்களுக்கு ரூ.8700 கோடி வழங்கும் இந்திய அரசு - என்ன திட்டம்?
கிரியேட்டர் பொருளாதாரத்தை மேம்படுத்த பில்லியன் டொலர் நிதி ஒதுக்குவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
ஒரு பில்லியன் டொலர்
இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்த பின்னர், Content Creation துறை பொழுதுபோக்கில் இருந்து பணம் புழங்கும் துறையாக உருவெடுத்துள்ளது.
அமேசான் போன்ற பிரபல பிராண்டுகள், Creator University', 'Creator Connect' ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, இந்த கன்டென்ட் கிரியேட்டர்களை தங்களது பொருட்களை சந்தைப்படுத்த பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இந்நிலையில், கிரியேட்டர் பொருளாதாரத்தை மேம்படுத்த, ஒரு பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.8700கோடி) நிதி ஒதுக்க உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
வரும் மே 1 முதல் 4 வரை மும்பையில், உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு(WAVES) உச்சி மாநாடு நடைபெற்ற உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய படைப்பாளர் தொழில்நுட்ப நிறுவனம்
இந்த மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"1 பில்லியன் டொலர் நிதி, சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆற்றல் மிக்க படைப்பாளிகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உற்பத்தியை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தைகளை அடையவும் உதவும்.
இந்த திட்டம் அரசாங்க பங்களிப்புகள் மற்றும் தனியார் துறை ஈடுபாட்டுடன், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) ஆக அமைக்கப்படும்.
இது தொடர்பான விரிவான திட்ட வரைவு விரைவில் வெளியிடப்படும்" என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், IIM, IIT போல் இந்திய படைப்பாளர் தொழில்நுட்ப நிறுவனத்தை (IICT) நிறுவுவதற்கு இந்திய அரசு ரூ.391 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த படிப்புகள் மற்றும் வசதிகள் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |