பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் - 100 சதவீத எத்தனாலுக்கு இந்தியாவில் அனுமதி
இந்தியாவில் வாகனங்களில் 100 சதவீத எத்தனால் எரிபொருளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
100 சதவீத எத்தனாலுக்கு இந்தியாவில் அனுமதி
இந்தியா பெட்ரோல் போன்ற எரிபொருள் தேவைக்காக ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது.
இதனை குறைக்கும் வகையில், எத்தனால் கலந்த எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து 20 சதவீத அளவில் எத்தனால் பெட்ரோலில் கலக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 100% எத்தனால் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கும் மற்றும் அதற்கு சட்டப்பூர்வ நடைமுறையை வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன்.

இந்த ஒப்புதல், எத்தனாலை, பெட்ரோலுக்கு ஒரு சாத்தியமான மாற்றாக உருவெடுக்கச் செய்து, ஆண்டுதோறும் கச்சா எண்ணெய்க்காக இந்தியா செலுத்தும் ரூ.22 லட்சம் கோடி சுமையைக் குறைக்க உதவும்" என தெரிவித்துள்ளார்.
எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பிற விவசாய கழிவுகளிலிருந்து கிடைக்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருள் ஆகும்.

ஆனால், தற்போதைய அனைத்து வாகனங்களிலும், 100% எத்தனால் எரிபொருளை பயன்படுத்த முடியாது.
80%, 100% எத்தனால் எரிபொருளை பயன்படுத்தும் பிளெக்ஸ்-பியூல் வகை வாகனம் இந்தியாவிலே முதன்முதலாக மாருதி சுசுகி வேகன்ஆர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, டொயோட்டா, எம்ஜி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் பிளெக்ஸ்-பியூல் வகை வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கெனவே பிளெக்ஸ்-பியூல் இருசக்கர மோட்டார் வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |