Bitcoin-ஐ தடை செய்யும் பிரபல நாடு முடிவு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு
இந்தியாவில் பிட்காயின்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக, பிட்காயின், ஷிபா இனு, டோஜ்காயின், எதிரியம் ஆகிய பல முன்னணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை சீனா தடை செய்தது. ஆனால் அமெரிக்கா பிட்காயின் வாயிலான ஈடிஎஃப்-க்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி கொடுக்கத் துவங்கின.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்தால் இந்தியா எந்தமாதிரியான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் ஆர்பிஐ, நிதியமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடைசெய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும், நவம்பர் 29-ஆம் திகதி தொடங்க உள்ள குளிர்காலக் கூட்டத்தொடரில் பிட்காயின்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியின் ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மசோதா, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பிட்காயின்களுக்கான எளிதான கட்டமைப்பை உருவாக்கும் எனவும் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்யும் என்று கூறப்படுகிறது.