இங்கிலாந்துடன் போராடி வெற்றி... இறுதிப் போட்டிக்கு 4வது முறையாக இந்தியா தகுதி
டி20 உலக கிண்ணம் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ளது.
சஞ்சு சாம்சன்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா ஏழு பந்துகள் எதிர்கொண்டு வெறும் ஒன்பது ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். இரண்டாவது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் இசான் கிஷன் ஆகியோர் அதிரடி காட்டி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
26 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரை சதம் கடக்க மறுமுனையில் இசான் கிஷன் 4 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 18 பந்துகளில் 39 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் சேர்த்தது.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் எட்டு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும். நான்காவது வீரராக களமிறங்கிய சிவம் துபேவும் சிக்ஸர்களை பறக்க விட்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் யாதவ் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க சிவம் துபே 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். திலக் வர்மா தன் பங்கிற்கு மூன்று சிக்சர் விளாச 7 பந்துகளில் 21 ஓட்டங்கள் சேர்த்தார்.
ஹர்திக் பாண்டியாவும், கடைசி கட்டத்தில் 12 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்கள் எடுத்தது. இதனை அடுத்து 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக விளையாடிய பில் சால்ட், ஐந்து ஓட்டங்களிலும், அணித்தலைவர் ஹரி புரூக் 7 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ஓட்டங்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.
ஜேக்கப் போத்தல்
இங்கிலாந்து அணி தடுமாற நடுவரிசையில் விளையாடிய ஜேக்கப் போத்தல், தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி இங்கிலாந்து ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்தார். 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஜாக் போத்தேல், ஐந்து சிக்சர், மூன்று பவுண்டரிகளை விளாசி தொடர்ந்து அதிரடி காட்டினார்.

மறுபுறம் டிம் பேண்டன் ஐந்து பந்துகளில் 17 ஓட்டங்களும், வில் ஜாக்ஸ் 20 பந்துகளில் 35 ஓட்டங்களும் எடுக்க இங்கிலாந்து அணிக்கு கடைசி நான்கு ஓவர்களில் வெற்றிக்கு 61 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
களத்தில் ஜாக் போத்தேல் கடைசி வரை நின்று இந்தியாவுக்கு தோல்வி பயத்தை அளித்தார். சிறப்பாக விளையாடிய போத்தேல் 45 பந்துகளில் சதம் விளாசினார்.

போட்டியின் 18வது ஓவரில் பும்ரா 6 ஓட்டங்களும், 19வது ஓவரில் ஹர்திக் 1 விக்கெட் உடன் 9 ஓட்டங்களை விட்டு கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
சிவம் துபே கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் போத்தேல் ரன் அவுட் ஆக, இங்கிலாந்தின் வாய்ப்பு முடிந்தது. இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி இங்கிலாந்தை 246 ஓட்டங்களில் கட்டுப்படுத்தினர்.

இதன் மூலம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 4வது முறையாக தகுதி பெற்று இருக்கிறது. மார்ச் 8 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை இந்திய அணி, நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |