நியூசிலாந்திற்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்தியா - ஒரே போட்டியில் பல சாதனைகள்
நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
2வது டி20 போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று ராய்பூரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தனர்.
அதிகபட்சமாக, மிட்செல் சாண்டார் 47 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 44 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்தியா அபார வெற்றி 209 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அதிரடியாக ஆடி 15.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து, 209 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களும், இஷான் கிஷன் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.

37 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 82 ஓட்டங்கள் குவித்த சூர்யகுமார் யாதவ், 468 நாட்களுக்கு பின்னர் T20 கிரிக்கெட்டில் அரைசதம் அடித்துள்ளார்.
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சாதனைகள்
இந்த போட்டியில், இந்திய அணி மற்றும் வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளன.
இது இந்தியாவில் இந்திய அணி விளையாடும் 100வது T20 போட்டி ஆகும். இதன் மூலம் சொந்த நாட்டில் அதிக T20 விளையாடிய ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Credit : AFP
சொந்த நாட்டில் நியூசிலாந்து 113 போட்டிகளில் விளையாடி முதலிடத்திலும், 108 போட்டிகளில் விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.
டி20 வரலாற்றில் இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ஓட்டங்களை சேஸ் செய்தது. ஆனால் அந்த போட்டியில் 19.5 ஓவர்களில் தான் இந்தியா 209 ஓட்டங்கள் எடுத்தது. நேற்றைய போட்டியில், 15.2 ஓவர்களில் சேஸ் செய்துள்ளது.
மேலும், இந்த போட்டியில், 200+ இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ள இந்திய அணி, 200+ ஓட்டங்களை அதிக முறை சேஸ் செய்த அணிகளின் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
200+ இலக்கை 7 முறை சேஸ் செய்து அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 6 முறை சேஸ் செய்து இந்தியா 2வது இடத்திலும், 5 முறை சேஸ் செய்து தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திலும் உள்ளது.
மேலும், T20 கிரிக்கெட்டில், 200+ ஓட்டங்களை அதிக பந்துகளை மீதம் வைத்து சேஸ் செய்து இந்தியா அணி உலக சாதனை படைத்துள்ளது.
முன்னதாக நியூசிலாந்திற்கு எதிராக பாகிஸ்தான் 24 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றதே உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்திய அணி, 28 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

Credit : X.com/BCCI
மேலும் முதல் T20 போட்டியில், 22 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா, நியூசிலாந்திற்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
நேற்றைய போட்டியில், 21 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், ஒரே போட்டியில் அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |