சிறந்த சலுகைக்கு தான் முன்னுரிமை! ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியா திட்டவட்டம்
எங்கு சிறந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறதோ அங்கே இந்தியா தனது வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு
உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக குறிப்பிட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50% என்ற வர்த்தக வரியை அறிவித்தார்.
இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது, இருப்பினும் ரஷ்யாவுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க போவதாக இந்தியா அறிவித்தது.
இந்தியாவின் இந்த முடிவு சர்வதேச அரங்கில் மிகப்பெரிய உற்று நோக்கலாக மாறியுள்ளது.
இந்தியா திட்டவட்டம்
இந்நிலையில் ரஷ்ய செய்தி நிறுவனமான TASS-க்கு பேட்டியளித்த ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார், சிறந்த விலையில் கச்சா எண்ணெய் எங்கு கிடைக்கிறதோ, அங்கு இந்தியா தொடர்ந்து தங்களுக்கு வேண்டிய கச்சா எண்ணெயை வாங்கும் என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் போது இந்தியாவுக்கு மட்டும் தனித்த நடைமுறை என்பது இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தியாவின் எரிசக்தி கொள்ளையானது, அதன் 1.4 பில்லியன் குடிமக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு என்பது முற்றிலும் நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தூதர் வினய் குமாரின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |