நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைக்கவுள்ள இந்தியா - உலக வங்கி கணிப்பு
India Coal Output to Hit Record 1,090 MT in 2026: இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2026-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
1,090 மில்லியன் டன் நிலக்கரி
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1.2 சதவீதம் உயர்ந்து, சுமார் 1,090 மில்லியன் டன் என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதும், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சியும் நிலக்கரி பயன்பாட்டை மேலும் அதிகரித்து வருகின்றன.
உலக வங்கி மதிப்பீடு
இதன் காரணமாக 2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரி தேவை 4.2 சதவீதம் உயர்ந்து 1,350 மில்லியன் டன்னாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
மேலும், கடுமையான வெப்பஅலைகள் காரணமாக நீர்மின் உற்பத்தி குறைவடைவதும், அதனை ஈடுகட்ட நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி அதிகரிப்பதும் முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய அளவில் பார்த்தால், சீனா, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய நிலக்கரி உற்பத்தி நாடுகளில் உற்பத்தி குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி உலக சந்தையில் முக்கிய பங்காற்றும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலகளாவிய நிலக்கரி உற்பத்தி 2026-ஆம் ஆண்டில் 0.7 சதவீதம் குறையும் நிலையில், இந்தியா மட்டும் உற்பத்தியை அதிகரித்து தனது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு, இறக்குமதி சார்பைக் குறைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு உள்நாட்டு சுரங்க உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
வளர்ந்து வரும் பொருளாதாரம், அதிகரிக்கும் மின்சார நுகர்வு மற்றும் தொழில்துறை விரிவாக்கம் ஆகியவை அடுத்த சில ஆண்டுகளிலும் நிலக்கரி தேவையை உயர்வாக வைத்திருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |