இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது! இது நியாயமற்றது - வெளியுறவுத்துறை
கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
25 சதவீதம் வரி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தார்.
இது இந்திய பொருளாதாரத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறி வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது.
வழக்கமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் ஐரோப்பாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கின.
போர் தொடங்கியபோது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஆதரித்தது.
இந்திய நுகர்வோர்கள் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் பெறுவதை உறுதி செய்வதே இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் நோக்கம்.
இந்தியாவை விமர்சனம் செய்யும் நாடுகளே ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது
மேலும் அந்த அறிக்கையில், "ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மட்டுமின்றி உரம், கனிம பொருட்கள், வேதிப்பொருட்கள், இரும்பு, எந்திரங்கள் உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கின்றன.
அமெரிக்காவும் ரஷ்யாவிடமிருந்து அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம், மின்சார கார் உற்பத்திக்கு தேவையான பலோடியம், உரங்கள், வேதிப்பொருட்களை கொள்முதல் செய்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவை அமெரிக்கா குறிவைப்பது நியாயமற்றது. ஒவ்வொரு பொருளாதார நாடுகளை போன்றே இந்தியாவும் அதன் தேசிய, பொருளாதார நலன்களை காக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும்" என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |