92 வருட வரலாற்றில்... டெஸ்ட்டில் முதன்முறையாக அதிக வெற்றிகள் பெற்ற இந்திய அணி
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 92 ஆண்டுகளில் முதன்முறையாக பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்துள்ளது.
580 டெஸ்ட் போட்டிகளில்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணியின் 179 டெஸ்ட் போட்டி வெற்றி ஆகும்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதுவரை இந்திய அணி 580 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மொத்தம் 179 வெற்றிகளும், 178 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
222 போட்டிகளை சமன் செய்துள்ள இந்திய அணி, ஒரு போட்டியை மட்டும் டை செய்துள்ளது. 1932ல் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது. அப்போது முதல் பல ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு அதிக அளவில் தோல்விகளே கிடைத்து வந்தன.
சென்னை மண்ணில்
இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி என்பது 1952ல் பதிவானது. அந்த வெற்றியும் இதே சென்னையில் தான் கிடைத்தது. தற்போது 72 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்ற சாதனையும் அதே சென்னை மண்ணில் தான் நடந்துள்ளது.
1988 வரை ஒரே ஆண்டில் இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்றதில்லை. முதன்முறையாக 1988ல் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றது.
கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணி 79 வெற்றிகளை பெற்றுள்ளது. அதற்கு முன்பு 432 போட்டிகளில் விளையாடி 100 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த இந்திய அணி, கடந்த 15 ஆண்டுகளில் 148 போட்டிகளில் விளையாடி 79 வெற்றிகளை பெற்று இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |