ராகுல், சூர்யகுமார் அரைசதம்! தென் ஆப்பிரிக்காவை அசால்டாக வீழ்த்தி இந்திய அணி வெற்றி
கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினர்.
வேகத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங், தீபக் சகார், ஹர்ஷல் படேல் விக்கெட் வேட்டை நடத்தினர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை முதல் போட்டி நடந்தது. நாணய சூழ்ச்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியை இந்தியாவின் வேகபந்து வீச்சாளர்கள் போட்டுத் தாக்கினர். தீபக் சகார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் டெம்பா பவுமா ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் போல்டானார். அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது ஓவரின் 2வது பந்தில் குயின்டன் டி காக் ஒரு ஓட்டம் எடுத்து போல்டானார்.
அடுத்து வந்த மார்க்ரம், இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ஓட்டங்களை துவக்கினார். இருப்பின்னும், தீயாக பந்துவீசிய அர்ஷ்தீப், கடைசி இரண்டு பந்தில் ரிலீ ரோசோவ், டேவிட் மில்லர் இருவரையும் ஒரு ஓட்டம் கூட எடுக்கவிடாமல் வெளியேற்றினார். தென் ஆப்ரிக்க அணி 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் இணைந்த மார்க்ரம், பார்னெல் ஜோடி நிதானமாக விளையாடியது. மார்க்ரம் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என பந்தை பறக்கவிட்டார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பார்னெல், தீபக் சகார் பந்தில் ஒரு சிக்சர் விளாசி ஓட்டங்களை சேர்த்தனர்.
ஆறாவது விக்கெட்டுக்கு 32 ஓட்டங்கள் சேர்த்த போது ஹர்ஷல் படேல் பந்தில் மார்க்ரம் (25) ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய பார்னெல் (24), அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து எட்டாவது விக்கெட்டுக்கு 33 ஓட்டங்கள் சேர்த்த போது மஹராஜ் (41) வெளியேறினார்.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 106 ஓட்டங்கள் எடுத்தது. ரபாடா (6), நார்ட்ஜே (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3, தீபக் சகார், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்க வீர்களான கேப்டன் ரோகித் சர்மா (0), விராத் கோஹ்லி (3) ஏமாற்றத்தை அளித்தனர்னர். பின் இணைந்த லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தது.
ரபாடா வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய சூர்யகுமார், 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஷாம்சி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராகுல், அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் எடுத்து எளிமையாக வெற்றி பெற்றது. ராகுல் (51), சூர்யகுமார் (50) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.