ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி இந்தியா லாபம் பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா
உக்ரைன் மீதான போரை கண்டித்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததை அடுத்து, இந்தியா போன்ற அதன் சில நட்பு நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.
சமீபத்தில் கூட, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா இந்தியா மீது 50% வரிவிதிப்பை அறிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெண்ட், ரஷ்ய எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி, அதை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆக மறுவிற்பனை செய்து இந்தியா லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது கூடுதல் வரி
ஸ்காட் பெசெண்ட் இதற்கு முன்பும் இந்தியாவை விமர்சித்துள்ளார். கடந்த வாரம் வழங்கிய பேட்டி ஒன்றில், அலாஸ்காவில் நடைபெறும் டிரம்ப்-புடின் சந்திப்பு நேர்மறையாக அமையாவிட்டால் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கக்கூடும் என எச்சரித்து இருந்தார்.
ரஷ்யாவுடன் இந்தியா எரிசக்தி வர்த்தகம் வைத்திருப்பதை கடந்த 10 நாட்களாக ஸ்காட் பெசெண்ட் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |