OLA, Uber நிறுவனங்களுக்கு போட்டியாக டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தும் இந்திய அரசு
சாகர் டாக்ஸி என்ற பெயரில் இந்திய அரசு டாக்ஸி சேவையை தொடங்க உள்ளது.
தனியார் டாக்ஸி நிறுவனங்கள்
இந்தியாவில் OLA, Uber போன்ற தனியார் டாக்ஸி நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக அந்த நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும்.
இந்த கமிஷன் தொகையை நிறுவனங்கள் அதிகளவில் வசூலிப்பதால் தங்களுக்கு பெரிதாக லாபம் கிடைப்பதில்லை என ஓட்டுநர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
தனியார் நிறுவனங்கள், பயணிகள் முன்பதிவு செய்யும் செல்போன் அடிப்படையில் மாறுப்பட்ட விலையை காட்டுவதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.
ஐபோன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மற்றவர்களை விட அதிக கட்டணம் காட்டியதாக பயணிகள் தெரிவித்தனர். ஓட்டுநர்களும் அதில் காட்டும் கட்டணத்தை விட, அதிக கட்டணம் கேட்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இந்திய அரசின் சாகர் டாக்ஸி
இந்நிலையில், இந்த நிறுவனங்களுக்கு மாற்றாக, சாகர் டாக்ஸி (Sahkar Taxi) என்ற பெயரில் கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில், தனியார் நிறுவனங்களின் டாக்ஸி சேவை போல், ஓட்டுநர்கள் கமிஷன் தொகை எதுவும் செலுத்த தேவை இல்லை.
ஓட்டுநர்கள் கமிஷன் தொகை செலுத்தாமல், நேரடி லாபத்தை பெற முடிவதால், தனியார் நிறுவனங்களின் கட்டணங்களை விட மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிகள் இதில் பயணிக்கலாம்.
இதில், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை, ஒரு சில மாதங்களில் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் சரியான விதிமுறைகளை உருவாக்கி சிறப்பான சேவையை வழங்கினால் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோர்டோர் இன்டலிஜென்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் டாக்ஸி சந்தை தற்போது $23.40 பில்லியனாக உள்ளது. 2030 ஆம் ஆண்டில், $44.18 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |