கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய இந்தியா: பின்னணியில் இருக்கும் காரணம்
India lifted wheat export ban: கடந்த 2022ல் விதித்த கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மாவு மீதான ஏற்றுமதித் தடையை இந்திய அரசு நீக்கியுள்ளதுடன், குறிப்பிட்ட கோதுமைப் பொருட்களை உடனடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட கொள்கையானது கோதுமை அல்லது மெஸ்லின் மாவு (அட்டா), மைதா, ரவை (சூஜி), முழு கோதுமை மாவு மற்றும் அதிலிருந்து பெறப்படும் மாவு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யலாம்.
உள்நாட்டு இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் கோதுமை ஏற்றுமதிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2022-இல், நாட்டின் 140 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது.
ரஷ்யா-உக்ரைன் போரினால் உலகளாவிய விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு விலைகள் உயர்ந்ததும், பயிர்களைச் சேதப்படுத்தி ஒட்டுமொத்த கோதுமை விளைச்சலைக் குறைத்த சுட்டெரிக்கும் வெப்பநிலையும் இந்த முடிவுக்கு வழிவகுத்தன.
பெருமளவிலான மக்கள் தொகைக்குத் தேவையானவற்றை உள்ளூரிலேயே கிடைக்கச் செய்வதை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
அக்காலகட்டத்தில், 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 2.05 பில்லியன் டொலர் மதிப்பிலான 7 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவை எட்டியிருந்தது.
உள்நாட்டு விலைகளைக் கட்டுப்படுத்துதல், உணவு விநியோகத்தைப் பாதுகாத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவையே இந்தத் தடையின் நோக்கங்களாக இருந்தன.

இந்தியாவின் சமீபத்திய கோதுமை அறுவடை 120.6 மில்லியன் டன்கள் என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியுள்ளதாலும், மொத்த உணவு தானிய உற்பத்தி 5.3 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், உள்நாட்டு விநியோகம் மேம்பட்டிருப்பதைக் காரணம் காட்டி இந்தியா தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ளது.
இந்தியாவில் கோதுமை அதிகம் பயிரிடப்படும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன.
2024-25 ஆம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 117.94 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான் மற்றும் ஈராக் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாகத் திகழ்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |