திருப்பி கொடுத்த இங்கிலாந்து! இந்தியாவின் ஆட்டத்தை அடக்கிய ராபின்சன்: அபார இன்னிங்ஸ் வெற்றி
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் கடந்த 25-ஆம் திகதி துவங்கியது, இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 78 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களான Rory Joseph Burns(61) மற்றும் Haseeb Hameed 68 ஓட்டங்கள் என சிறப்பான துவக்கம் கொடுக்க, இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்தது.
அணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ஓட்டங்கள் குவிக்க இங்கிலாந்து அணி, 432 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் 354 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான கே.எல்.ராகுல் 8 ஓட்டங்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பின் ரோகித்சர்மா, புஜாரா ஜோடி சிறப்பாக விளையாடி வர, ரோகித்சர்மா 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து கோஹ்லி மற்றும் புஜாரா ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து வர, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 212 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு புஜாரா 91 மற்றும் கோஹ்லி 45 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து இன்று நான்காவது நாள் ஆட்டம் துவங்கிய சில ஓவர்களிலே இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் அடுத்தடுத்து விழுந்தன.
புஜாரா(91) மற்றும் கோஹ்லி(55)-ல் வெளியேற, இந்திய அணி இறுதியாக 278 ஓட்டங்களுக்குள் ஆல் ஆட் ஆகி, 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஓலி ராபின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக மாறினார்.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் தலா 1-1 என்ற வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.