மந்தனா சதம் அடித்தும் பயனில்லை., அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த இந்திய மகளிர் அணி
3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலிய மகளிர் அணி.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
பெர்த்தில் உள்ள டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெட்ரா இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால், அடுத்து விளையாடிய இந்திய அணி 45.1 ஓவரில் 215 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
அவுஸ்திரேலிய அணியில் அனபெல் சதர்லேண்ட் 110 ஓட்டங்கள் எடுத்தார். ஆஷ்லி கார்ட்னர் 50 ஓட்டங்களும், மெக்ராத் 56 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஸ்மிருதி மந்தனா சதம்
இலக்கை துரத்திய இந்திய அணியில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்தார். அவர் 109 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்தார்.
ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதியின் 9-வது சதம் இதுவாகும். அப்போது மந்தனா 13 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார்.
ஹர்லீன் தியோல் 39 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இரண்டு வீரர்களைத் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீசில் நிலைத்து நிற்க முடியவில்லை.
அவுஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லி கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எலனா கிங் மற்றும் மேகன் ஸ்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அனபெல் சதர்லேண்ட் 1 விக்கெட் வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs Australia Womens 3rd ODI