ரூ 2 லட்சம் கோடி... ஈரான் போரால் இந்தியா எதிர்கொண்ட இழப்பு
During Iran conflict India paid second highest: கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான இரண்டாவது அதிகபட்ச தொகையை இந்தியா செலவிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எத்தகைய பாதிப்பு மற்றும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை CREA அமைப்பு விரிவான தரவுகளை வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில், புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 55 பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1990-ஆம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட கால விலை அதிர்ச்சி இதுவாகும். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தூய்மையான ஆற்றல் துறையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் இல்லாவிட்டால், புதைபடிவ எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 36 பில்லியன் டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும் என்று 'ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம்' (CREA) தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில், 35.5 பில்லியன் டொலர் செலவிட்ட சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா புதைபடிவ எரிபொருட்களுக்காகக் கூடுதலாக 22 பில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளது.
அதாவது இந்தியா ரூ 2 லட்சம் கோடி அளவுக்கு அதிகமாக செலவிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்திருப்பது ஏழை நாடுகளையே மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
மார்ச் மற்றும் ஆகஸ்ட் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிகத் தொகையைச் செலவிட்ட முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
பிப்ரவரி மாதம் துவங்கிய போர் மூலம் கடந்த 6 மாதத்தில் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக கொடுத்து எரிபொருளை வாங்கியுள்ளது.
போருக்கு முன்பு இருந்த விலை நிலையும், பிப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்பு ஏற்பட்ட விலை உயர்வை ஒப்பிடுகையில் ஆசிய நாடுகள் வாங்கும் எல்என்ஜி விலை சராசரியாக 75 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஐரோப்பா வாங்கும் எல்என்ஜி விலை 60 சதவீதமும், டீசல் 59 சதவீதமும், கச்சா எண்ணெய் 35 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது என CREA அமைப்பு கணக்கிட்டு உள்ளது.
இந்த விலை உயர்வால் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவு செய்துள்ளது. இதில் பெரும் பங்கை ஐரோப்பிய நாடுகள் செலுத்தியுள்ளது சுமார் 78 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவிட்டு உள்ளது.
சீனாவுக்கு அடுத்தாக உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்கமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் வேளையில் மார்ச் மாதம் நாட்டின் LNG இறக்குமதி என்பது 49 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எல்என்ஜி இறக்குமதி என்பது வெறும் 8 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் வரையில் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமான எரிவாயு சப்ளையராக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |